என் பந்தில் கோலி அடித்த சிக்சர்களை போல் வேறு யாராலும் அடிக்க முடியாது... - பாக்.வீரர் ஹாரிஸ் ரவுப் பேட்டி
என் பந்தில் கோலி அடித்த சிக்சர்களை போல் வேறு யாராலும் அடிக்க முடியாது என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் தெரிவித்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 13ம் தேதி நிறைவடைந்தது.
இப்போட்டியில், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கலந்து கொண்டு விளையாடின. நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா -
சமீபத்தில், T20 உலக கோப்பை போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதியது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.
ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகனாக விருதை கைப்பற்றினார் விராட் கோலி.
பாக்.வீரர் ஹாரிஸ் ரவுப் நெகிழ்ச்சி பேட்டி -
இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடியபோது, 19-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப்பின் அதிவேக பந்துவீச்சில் சற்று எழும்பி வந்த பந்தை கோலி நேர்திசையில் அலாக்காக சிக்சருக்கு விரட்டியது மெய்சிலிர்க்க வைத்தது.
எப்படி இந்த மாதிரி ஒரு சிக்சர் அடித்தார் என்று அனைவரும் வியந்து பேசினார்கள். அடுத்து 'பைன்லெக்' திசையில் அடித்த சிக்சரும் மறக்க முடியவே முடியாது.
இந்நிலையில், இது குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப். அவர் அளித்த பேட்டியில் பேசுகையில்,
உலகக் கோப்பை போட்டியில் கோலி விளையாடிய விதம், ஷாட்டுகள் எல்லாமே தனித் தரம் வாய்ந்ததாக இருந்தது. சிக்சர்களை அவர் அடித்த விதத்தை போல் வேறு எந்த வீரராலும் அடித்திருக்க முடியாது.
ஒரு வேளை தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இது மாதிரி என்னுடைய பந்து வீச்சில் சிக்சர் அடித்திருந்தால் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் அது கோலியின் பேட்டிலிருந்து வந்தது. அது தான் அவருக்கும் மற்றவர்களுக்குமான ஆட்ட தரத்தில் உள்ள வித்தியாசம் என்றார்.