வீணாய் போன கோலியின் ஆட்டம் : வரலாற்றை மாற்றி எழுதியது பாகிஸ்தான்

INDvsPAK WCT20 TeamPakistan
By Irumporai Oct 24, 2021 05:47 PM GMT
Report

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின, இன்றைய ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். பாகிஸ்தானின் ஷகீன் அப்ரிடி முதல் ஓவரை வீசினார்.

அவர் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் ஷகீன் அப்ரிடி வீசிய 3ஆவது ஓவரின் முதல் பந்தில் கே.எல்.ராகுல் போல்ட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

இதையடுத்து ஹசன் அலி வீசிய 6-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். பவர்பிளே முடிவதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

இதன் பிறகு ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர்.

இவர்கள் சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட்(39 ரன்கள்) ஷகத் கான் வீசிய பந்தை தூக்கி அடித்த போது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜடேஜாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இதனை தொடர்ந்து 18ஆவது ஓவரில் விராட் கோலி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஆண்கள் டி 20 உலகக்கோப்பையில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

அடுத்துவந்த ஹர்த்திக் பாண்டியா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 20 ஓவர் முடிவில் 151 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பாகிஸ்தானில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்களையும் ஹஸன் அலி 2 விக்கெட்களையும் அதிகபட்சமாக கைப்பற்றினர். இதனையடுத்து பாகிஸ்தானில் கேப்டன் பாபர், ரிஸ்வான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி சீரான ரன் சேர்த்தனர். கேப்டன் பாபர் அரைதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து ரிஸ்வான் அரைசதம் அடித்தார். அதன்பின்னர் இருவரும் சிக்ஸர், பவுண்ட்ரிகளை விரட்டினர். அவர்களை விக்கெட் எடுக்க இந்திய வீரர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்திய பவுலர்களின் யாக்கர்களை அவர்கள் தடுத்து ஆடினர்.

17.5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் முதல்முறையாக பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது. இது சாதனை வெற்றியாக பதிவானது.