டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் அணி அறிவிப்பு

Pakistan Team T20 World Cup
By Thahir Sep 06, 2021 09:20 AM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட வலிமையான அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

அந்நாட்டில் உள்ள துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன.

டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் அணி அறிவிப்பு | T20 World Cub Pakistan Team

இதில் சூப்பர் 12 பிரிவில் குரூப்- 2 பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணியோடு சேர்த்து பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.

குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும், தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணியும், பி பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.

துபாயில் வரும் அக்டோபர் 24-ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் சிறப்பாக விளையாடிய ஆஷிப் அலி, குஷ்தில் ஷா ஆகியோர் அணியில் நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்த சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஷிப் அலியின் டி20 ஸ்ட்ரைக் ரேட் 147 வைத்துள்ளார். குஷ்தில் ஸ்ட்ரைக் ரேட் 137 வைத்துள்ளார்.

இதற்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக, இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணியுடன் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இதற்கான 19 வீரர்கள் கொண்ட அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான அணியில் 5 பேட்ஸ்மேன்கள், 4 ஆல்ரவுண்டர்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 4 வேகப்பந்துவீச்சாளர்கள் கொண்ட அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான அணி விவரம்: பாபர் ஆஸம் (கேப்டன்), ஆஷிப் அலி, குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், ஷோயிப் மசூத் (பேட்ஸ்மேன்கள்), ஆஸம் கான், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்கள்), இமாத் வாசிம், முகமது நவாஸ், முகமது வாசிம், சதாப் கான் (ஆல்ரவுண்டர்கள்), ஹரிஸ் ரவுப், ஹசன் அலி, முகமது ஹஸ்னைன், ஷாஹின் ஷாஅப்ரிடி( வேகப்பந்துவீச்சாளர்கள்)

ரிசர்வ் வீரர்கள்: பக்கர் ஜமான், ஷாநவாஸ் தனானி, உஸ்மான் காதிர்