இந்திய அணியில் மீண்டும் அஸ்வின் - ”நன்றி, மகிழ்ச்சி” என உருக்கம்
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்குப்பின் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திர அஸ்வின், ' நன்றி, மகிழ்ச்சி என இரு வார்த்தைகளால் மட்டுமே என்னை இப்போது வரையறுக்க முடியும் ' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கின்றன. இதற்கான 15பேர் கொண்ட இந்திய அணியை அனைத்து இந்திய சீனியர் தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.
இதில் 4 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் அணிக்குள் மீண்டும் வந்துள்ளார். இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக அஸ்வின் விளையாடினார் அதன்பின் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
அஸ்வினின் எதிர்காலம் முடிந்துவிட்டது ஒருநாள், டி20 போட்டிகளில் தேர்வுசெய்யப்படமாட்டார் எனப் பேசப்பட்ட நிலையில் இப்போது அவரின் திறமைக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தசூழலில் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் 'ஒவ்வொரு குகையின் முடிவிலும் வெளிச்சம் இருக்கிறது. ஆனால், குகையில் இருப்போர் வெளிச்சத்தை பார்க்க முடியும், வாழ முடியும் என்று நம்ப வேண்டும்'.
கடந்த 2017-ம் ஆண்டு சுவற்றில் இந்த வாசகத்தை எழுதும் முன், இந்த வாசகத்தை நான் லட்சக்கணக்கான முறை எனது டைரியில் எழுதினேன். இந்த வாசகத்தை படித்து உள்வாங்கி வாழ்க்கையில் கடைபிடித்தால் அதற்கான சக்தி அதிகமிருக்கிறது. நன்றி, மகிழ்ச்சி ஆகிய இரு வார்த்தைகள்தான் என்னை இப்போது வரையறுக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
2017: I wrote this quote down a million times in my diary before putting this up on the wall! Quotes that we read and admire have more power when we internalise them and apply in life.
— Mask up and take your vaccine???? (@ashwinravi99) September 8, 2021
Happiness and gratitude are the only 2 words that define me now.? #t20worldcup2021 pic.twitter.com/O0L3y6OBLl