5 விக்கெட் வித்தியசாத்தில் கடுமையாக போராடி வெற்றி பெற்றது இந்திய
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும், சேப்மன் 63 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு, கே.எல் ராகுல் 15 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த ரோஹித் சர்மா - சூர்யகுமார் ஜோடி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து அசால்டாக ரன் குவித்தது.
ரோஹித் சர்மா 48 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 62 ரன்களிலும் விக்கெட்டை இழந்தபிறகு, இந்திய பேட்ஸ்மேன்கள் வெற்றிக்காக கடுமையாக திணறியதால் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
நியூசிலாந்து அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் அனைவரும் 4 ஓவர்களை வீசிவிட்டதால், வேறு வழியின்றி நியூசிலாந்து அணி கடைசி ஓவரை டேரில் மிட்செலிடம் கொடுத்தது.
முக்கியமான கடைசி ஓவரை ஒரு வைட் பந்துடன் துவங்கிய மிட்செல், அந்த ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து கொடுத்தாலும், இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு வைட் கொடுத்ததால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1- 3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.