இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்: அடுத்தது யார் தெரியுமா?
டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாகவும், அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் ஆக நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மகேந்திர சிங் தோனிக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வித போட்டிகளுக்கும் கேப்டன் ஆக உள்ளவர் விராட் கோலி. மாடர்ன் கிரிக்கெட்டில் உலகளவில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
கேப்டன் ஆக பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ள விராட் கோலி விரைவில் அதில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்னர் ரோஹித் ஷர்மாவிடம், விராட் கோலி கேப்டன் பதவியை ஒப்படைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த ஆர்வமாக உள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. T20, ODI மற்றும் டெஸ்ட் தொடர் என அனைத்து வடிவங்களிலும் கேப்டனாக இருப்பதால் ஒட்டுமொத்த பொறுப்புகளும் அவரது பேட்டிங்கை பாதிக்கிறது என்பதை விராட் கோலி உணர்ந்துள்ளார்.
கோஹ்லியின் கேப்டன்சி மிகப்பெரிய விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்திய அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை. சமீபத்தில், ஜூன் மாதம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. இது மேலும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.