கேப்டன் பதவி எல்லாம் நமக்கு வேணாம் கோலி - மொத்தமா விலகிடுங்க; அட்வைஸ் கொடுக்கும் அப்ரிடி
டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதை போன்று விராட் கோலி ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலக வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஐசிசி.,யால் நடத்தப்படும் தொடரில் இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுக்க முடியாத கேப்டன் என்ற ஒரு அவப்பெயரை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சம்பாதித்து வருகிறார்.
மேலும் 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பிறகு இன்று வரை ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகமான அழுத்தங்களை கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கொடுக்கத் துவங்கினர்.
இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2021 உலக கோப்பை தொடருக்குப் பின் டி20தொடர் கேப்டனாக பயணிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அதேபோன்று இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காகவும் மற்றும் வேலைப் பளு காரணமாகும் தான் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் சாகித் அப்ரிடி பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரும் சக்தியாகும், இவர் அனைத்து விதமான தொடரிலிருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் அப்படி செய்தால் விராட் கோலியால் இன்னும் மிக சிறப்பாக செயல்பட முடியும், அப்படி விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தால் பேட்டிங்கில் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் அவர் மிகவும் சந்தோசமாக பேட்டிங் செய்வார் என்று சாகித் அப்ரிடி தெரிவித்தார்.
மேலும் டி20 தொடர் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டது குறித்து பேசிய ஷாகித் அப்ரிடி, ரோகித் சர்மாவுடன் நான் ஒரு வருடம் விளையாடி உள்ளேன் அவர் ஒரு மிகச் சிறந்த வீரர் மற்றும் சிறந்த சிந்தனை உடையவர், ரோஹித் சர்மா மிக சிறந்த முறையில் வீரர்களை வழி நடத்தக்கூடிய தலைவர் என்றும் ரோகித் சர்மாவை பாராட்டிப் பேசுகிறார்.