இனிமேல் இதான் வழி - சுனில் கவாஸ்கர் கருத்து: பரிசீலிக்குமா பிசிசிஐ?
இந்திய டி20 அணி கேப்டன் பதவிக்கு யார் சரியாக இருப்பார் என்பதை முடிவெடுக்க சிறந்த முறையை சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றிலேயே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளியேறிவிட்டது.
இந்த தொடருக்கு பின்னர் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று அறிவித்தார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் நியூசிலாந்து அணியுடன் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடர் முதல் புதிய கேப்டன் பொறுப்பேற்கவுள்ளார். புதிய கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் கேப்டன் யார் என்பது குறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்கு காரணம் ரோகித் சர்மாவின் வயது தான். அவருக்கு தற்போது 34 வயதாகிறது.
இவரை தற்போது கேப்டனாக நியமித்தால் இந்தியாவின் எதிர்காலத்தில் திடீரென ஒரு வீரரை கேப்டனாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். எனவே எதிர்காலத்தை மனதில் வைத்து கே.எல்.ராகுல் அல்லது ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என சில முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அதற்கு சுனில் கவாஸ்கர் முடிவு கட்டியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஒருவேளை அடுத்த உலகக்கோப்பை 2 - 3 ஆண்டுகளில் இருந்தால் நீண்ட கால யோசனை இருக்கலாம். ஆனால் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை வருகிறது.
எனவே இந்த சூழலில் நீண்ட வருடத்திற்கான கேப்டனை தேர்வு செய்வதை விட, கோப்பையை வென்றுக்கொடுக்க கூடிய கேப்டனை தேர்வு செய்வதே சிறந்தது. அப்படி பார்த்தால் ரோகித் சர்மா தான் சிறந்தவர். ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவின் சாதனைகள் அற்புதமாக உள்ளது. 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ளார்.
எனவே அடுத்த உலகக்கோப்பைக்கு அவர் கேப்டனாக இருப்பதே சிறந்தது. ஆஸ்திரேலிய உலகக்கோப்பைக்கு பிறகு வேண்டுமானால் புதிய இளம் கேப்டனை பற்றி யோசிக்கலாம். ஆனால் தற்போதைக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பது தான் சிறந்தது.