விடாது துரத்தும் சிம்பு பிரச்சனை - மாநாடு தயாரிப்பாளர் மீது டி.ராஜேந்தர் வழக்கு
மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை விவகாரம் தொடர்பாக டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடிப்பில், யுவனின் இசையில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால் படம் ரிலீசாவதற்கு முந்தைய நாள் இரவு வரை சாட்டிலைட் உரிமை, மற்றும் ஓடிடி உரிமை விற்பனையாவதில் ஏற்பட்ட சிக்கல்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக டி.ராஜேந்தர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தரை ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் அவரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது.
ஆனால் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விற்க முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பாக டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் பேரில் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.