“வந்தா ராஜாவா தான் வருவேன்” மீண்டும் ஹைதராபாத் அணியுடன் இணையும் தமிழக வீரர் நடராஜன்
காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைக்கு பின்பு பயிற்சியில் ஈடுபட்டு வந்த தமிழக வீரர் நடராஜன் விரைவில் ஹதராபாத் அணியுடன் இணைந்து ஐபிஎல்எலில் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்தாண்டு ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் நடராஜனுக்கு சிறப்பாகவே அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடராஜன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து பார்மெட்களிலும் விளையாடி அசத்தினார்.
அதன்பின்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார்.
இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் மெல்ல தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் நடராஜன்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்தப் பேட்டியில் ஐபிஎல்லில் விளையாட பயிற்சி எடுத்து வருவதாக கூறினார்.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அமீரகம் புறப்படுகிறது. அதில் நடராஜனும் செல்வதாக அந்த அணியின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனால் காயத்தில் இருந்து மீண்ட நடராஜன் ஐபிஎல்லில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.