ஐபேக் அமைப்பின் இணையதளம் முடங்கியது! சீன ஹேக்கர்கள் காரணமா?
சீனாவுக்கு எதிராக மேற்குலக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஐபேக் அமைப்பு செயல்பட்டு வருகின்றனது. இந்த அமைப்பின் இணையதளம் இன்று சீன ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஐபேக் வலைத்தளம் கடந்த திங்களன்று, டி.டி.ஓ.எஸ் தாக்குதலுக்கு ஆளான பின்னர் சேவை முற்றிலும் தடைப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலியாவிலிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து ஐபேக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லூக் டி புல்போர்ட் கூறுகையில், “சீனாவால் இணையதளத்தை மட்டுமே தங்கள் ஹேக்கர்கள் மூலம் தடை செய்ய முடியும். ஆனால் ஐபேக் உறுப்பினர்கள் உய்குர்கள் மற்றும் ஹாங்காங்கர்களுக்கு ஆதரவாக எழுந்து நிற்பதை எதுவும் தடுக்க முடியாது.” என்றார்.
இது குறித்து, சைபர் பாதுகாப்பு நிபுணர் ராபர்ட் பிரிட்சார்ட் கூறுகையில், டிடிஓஎஸ் தாக்குதல்களை நடத்துவதற்கான எந்திரம் சீன அரசிடம் இருந்தது என்று கூறியுள்ளார். பல இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சைபர் தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது.
ஐபேக் எனும் சர்வதேச நாடுகளின் எம்பிக்களின் கூட்டணி 2020’ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள 20 பாராளுமன்றங்களிலிருந்து சுமார் 200 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். சீன அரசு ஊடகங்கள் முன்னர் ஐபேக் அமைப்பை தொல்லை தரும் கூட்டணி என்று விமர்சித்துள்ளது.