முடிவுக்கு வந்த 50 ஆண்டு குடும்ப ஆட்சி; அதிபர் தப்பி சென்ற விமானம் மாயம்? - சிரியாவில் நடப்பது என்ன?

Syria Flight World
By Karthikraja Dec 08, 2024 05:37 AM GMT
Report

 சிரியா அதிபர் அல் அசாத் தப்பி சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா

மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து உள்ள நாடு சிரியா. இங்கு 1970 முதல் அபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்து வந்தார். அவரது மறைவிற்கு பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் அவர் மகன் பசார் அல்-அசத் அதிபராக உள்ளார். 

Bashar al-Assad syria president flight

சிரியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் அதிபர் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் குழு போராடி வருகிறது. ஆனால் ரஷ்யா, ஈரான் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வந்தது.

கிளர்ச்சிப்படை

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், துருக்கி ஆதரவு அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் 10 க்கு மேற்பட்ட இயக்கங்களை சேர்த்து கொண்டு திடீரென சிரியா ராணுவத்தின் மீது தாக்குதலை தொடங்கியது. 

syria damascus

மேலும், அலெப்போ, டெல்ரிப்ஃபாட், தாரா, ஹோம்ஸ் ஆகிய நகரங்களை தொடர்ந்து கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தற்போது தலைநகரான தமஸ்கஸ் உள்ளே நுழைந்துள்ளது. ராணுவம் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்து விட்டது.

அதிபர் விமானம் மாயம்

தலைநகருக்குள் புகுந்துள்ள கிளர்ச்சிப்படை, அரசு தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை கைப்பற்றியுள்ளனர். அதிபர் அசாத்தின் ஆட்சி முடிவடைந்து விட்டதாக ராணுவ கமாண்டர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அதிபர் பசார் அல்-அசத், உயிருக்கு பயந்து விமானம் மூலம் தப்பியோடியதாக தகவல் வெளியானது. மேலும் அதிபர் தப்பி சென்று விமானம் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.