அரசு பள்ளி முதல் தமிழக டிஜிபி வரை சைலேந்திர பாபு கடந்து வந்த பாதை!
தமிழ்நாட்டின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதுள்ள டி.ஜி.பி திரிபாதி இன்றுடள் ஓய்வுபெற்றார் இந்தநிலையில், தமிழ்நாட்டின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதவியேற்றார்.
டாக்டர் சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். 1987-ம் வருட தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி. 34 வருடங்கள் போலீஸ் பணியில் இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் எழுதிய 13 புத்தகங்கள் பிரபலமானவை. அதில் மூன்று போலீஸ் துறை பற்றியது. மீதி அனைத்தும் ஐ.பி.எஸ். படிக்கும் மாணவர்களுக்கானவை.
50 வயதை கடந்த பிறகும், காஷ்மீர் டூ கன்னியாகுமரி வரை 22 பேர் கொண்ட குழுவினருடன் சைக்கிளில் பயணப்பட்டிருக்கிறார். தலைமன்னார் டூ தனுஷ்கோடி வரையிலான 28 கி.மீ. தூரத்தை போலீஸ் குழுவினருடன் நீந்தி சாதனை படைத்தவர். இதுவரை 50 மாரத்தான்களில் கலந்து கொண்டு இருக்கிறார். தற்போது ரயில்வே போலீஸ் டி.ஜி.பி. பதவியில் இருக்கிறார். தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி-களில் சீனியர் இவர்தான். தற்போது ஹெட் ஆஃப் தி போர்ஸ் மற்றும் தமிழக சட்டம் ஒழுங்குப்பிரிவு டி.ஜி.பி-யாக உள்ள திரிபாதி இன்றுடன் ஒய்வு பெற்றார். காலியாகும் அந்த பதவிக்குதான் நியமிக்கப்பட்டிருக்கிறார் சைலேந்திரபாபு.
தமிழக ரயில்வே போலீஸுன் உயர் அதிகாரியாக கடந்த மூன்றரை வருடங்களாக இருந்து வருகிறார். ரயில்வே போலீஸ் பணியிலும் சைலேந்திரபாவு முத்திரை பதித்தார். அவர் வருவதற்கு முன்பு, ரயிலில் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக வருடத்துக்கு 300 முதல் தகவல் அறிக்கைகள்தான் போடுவார்கள். ஆனால் சைலேந்திரபாபு வந்ததும், ரயில்வே காவல்நிலைய அதிகாரிகளை அழைத்து புகார்களை வாங்கி, எப்.ஐ.ஆர். போடவேண்டும் என்று கறாராக உத்தரவு போட்டார். அதன் பிறகு, வருடத்துக்கு 3,000 முதல் 3,500 எப்.ஐ.ஆர்-கள் பதிவாகின. தனியாக பயணிக்கும் பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்யும் ஆசாமிகள் பலரைப் பற்றி ரயில்வே போலீஸுன் அவசர போன் எண்ணிற்கு புகார் போகும். அடுத்த நிமிடமே, அந்த ஆசாமிகளை ரயில்வே போலீஸார் சுற்றிவளைத்து பிடிப்பார்கள். ரயிலில் பயணிக்கும் பயணிகள் நிம்மதியுடன் பயணித்து வருவதற்கு சைலேந்திரபாவுவின் பலவித நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்கிறார்கள் துறை சார்ந்த அதிகாரிகள்.
சந்தனகடத்தல் வீரப்பனை பிடிப்பதில் தீவிரமாக செயல்பட்டவர் சைலேந்திரபாபு. 1990-களில் ஈரோடு மாவட்டம் காடுகளை ஒட்டிய 12 கிராமங்களில் தேர்தல் நடக்க தடை விதித்தது வீரப்பன் தரப்பு. அப்போது கோபிசெட்டிபாளைய ஏ.எஸ்.பி-யாக பணியில் இருந்தார் சைலேந்திரபாபு. பலமுறை வீரப்பன் கோஷ்டிக்கும் போலீஸாருக்கும் நேரடியான மோதல் சம்பவங்கள் நடந்தன. ஈரோடு மாவட்டம் கடம்பூர் காவல்நிலைய லிமிட்டில் நேரடியாக துப்பாக்கி சண்டை நடந்தது. வீரப்பன் கோஷ்டியை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் மூவருக்கு கடுமையான குண்டு காயங்கள். சில கிராமங்களில் பஸ் போக்குவரத்தை தடை செய்யும் நோக்கில் ரோட்டில் மரங்களை வெட்டிப்போட்டு தடை ஏற்படுத்தியிருந்தது வீரப்பன் தரப்பு. அங்கெல்லாம், அரசு பஸ்ஸை சைலேந்திரபாவுவே ஒட்டிச் சென்றார். தடைகளை தகர்த்து, பஸ்களை இயக்கியதைப் பார்த்த வீரப்பன் கோஷ்டியினர் அதிர்ந்தனர்.
வீரப்பனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்கள் 5 பேர்கள். கர்நாடகாவை சேர்ந்த அதிகாரிகளான எஸ்.பி-யான ஹரிகிருஷ்ணா, டி.எஃப். ஒ சீனிவாசஸ், எஸ்.ஐ. ஷகீல், எஸ்.ஐ. தினேஷ் மற்றும் சைலேந்திரபாபு. இதில் சைலேந்திரபாபு தவிர மற்ற நான்கு அதிகாரிகளும் வீரப்பனால் இரண்டே ஆண்டுகளில் கொல்லப்பட்டனர். ஆனால் சைலேந்திரபாபுவை வீரப்பன் தரப்பினரால் நெருங்கமுடியவில்லை. வீரப்பனின் மனைவியின் கிராமமான நெருப்பூரில் உள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டடத்தில் இரவு பகலாக தங்கி வீரப்பனை பிடிக்க ஸ்கெட்ச் போட்டார். பிறகு, 2000-ம் வருடம் மீண்டும் வீரப்பனை பிடிக்க அனுப்பப்பட்டார் சைலேந்திரபாபு. செவ்வந்திமலை பகுதியில் வீரப்பன் தங்கியிருக்கும் தகவல் கிடைத்து, அங்கே படையினருடன் சென்றார் சைலேந்திரபாபு. சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸார் சுற்றிவளைக்க.. இரவு நேரத்தை பயன்படுத்தி வீரப்பனும், அவரது கோஷ்டியினரும் தப்பிச்சென்றுவிட்டனர்.
1992-ல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிராமத்தருகே நக்ஸலைட் நடமாட்டம் இருப்பதாக கேள்விப்பட்டு, டாக்டர் சைலேந்திரபாபு தனது படையினருடன் அங்கே சென்றார். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் நக்ஸலைட் நாகராஜன் எனபவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
பல்வேறு சந்தர்பங்களில் திறம்பட பணியாற்றிய டாக்டர் சைலேந்திர பாபு இளையதலைமுறையினர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.தமிழக டிஜிபியாக பதவியேற்றுள்ள டாக்டர் சைலேந்திர பாபுவிற்கு ஐபிசி தமிழ்நாடு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.