’தயவு செய்து இனி இப்படி செய்யாதீங்கப்பா’ - பள்ளிகளில் மாணவர்கள் அட்டூழியம் ; டிஜிபி சைலேந்திர பாபு வேதனை

Tamil Nadu Police
By Swetha Subash Apr 27, 2022 07:25 AM GMT
Report

கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுப்படுவதும், வகுப்பில் ஆசிரியர்களை மிரட்டுவதும், பள்ளியில் பயிலும் சக மாணவிகளின் மடியில் படுத்து உறங்குவதும் போன்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

படித்து தன் பிள்ளை வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் பேரிடியாக அமைந்துள்ளது.

அதன்படி, அண்மையில், வேலூர் அடுத்த தொரப்பாடியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சனிக்கிழமை மாலை 12-ம் வகுப்பு C பிரிவு மாணவர்கள் சிலர் வீட்டுக்குச் செல்லாமல் வகுப்பறையிலேயே மேஜைகளை உடைத்து அட்டகாசம் செய்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆசிரியர்கள் மாணவர்களை பார்த்து வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறியும், அதை சற்றும் பொருட்படுத்திக் கொள்ளாத மாணவர்கள், வகுப்பறையிலிருந்த இரும்பு மேசைகளை அடித்து உடைப்பது போல் வீடியோவில் பதிவாகி இருந்தது.

உடனடியாக பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் உடனடியாக பள்ளிக்கு விரைந்து சென்றனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும், அட்டகாசத்தில் ஈடுபட்ட 10 மாணவர்களை பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சிய குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் இது குறித்து வீடியோ பதிவில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இணையத்தில் வலம் வரும் காணொலிகளை பார்த்து “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற மனநிலையில் பேசுகிறேன். போதிய வருமானம் இல்லாத பெற்றோர்களே அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கிறார்கள்.

அரசுப்பள்ளி மாணவர்களே! உங்கள் பெற்றோரிடம் சொத்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல. உங்கள் அரசுப்பள்ளி தான் உங்கள் சொத்து! அங்குள்ள மைதானம், வகுப்பறை, மேஜை, நாற்காலிகள், அங்கிருக்கும் ஆசிரியர்கள் அனைத்தும் உங்கள் சொத்து! அந்த ஆசிரியர்களால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்.

ஆனால் தற்போது ஆசிரியர்களை தாக்க மாணவர்கள் கை ஓங்குவதைப் பார்க்க முடிகிறது. எப்படி இந்தச் சூழல் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இந்த ஆசிரியர்கள் நமக்கு கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு, கணிப்பொறி ஆகியவற்றை நமக்கு சொல்லித் தருவார்கள். இவர்கள் நமக்கு மிகப்பெரிய சொத்து. நம் கற்றுக் கொள்வதற்கான ஆதாரம்.

அறிவையையும், செயல்திறனையும், நல்ல மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இது போன்ற வன்முறைச் செயல்களில் ஏன் ஈடுபடுகிறீர்கள்? இது நம் வீட்டை நாமே தீவைத்து கொளுத்துவது போல உள்ளது.

நம் கைகால்களை நாமே வெட்டுவது போல, நமக்கான ஆதாரங்களை நாமே அழிக்கலாமா? கடவுளுக்கும் மேலான அவர்களிடமா இந்த வன்முறை? தயவுசெய்து இது போன்ற செயல்களை இனி செய்யாதீர்கள். நீங்கள் முழு மனிதனாக, செயல்திறன் மிக்கவராக, சிந்தனையாளராக மாற தயார் செய்யும் பயிற்சிக்கூடம் தான் பள்ளிக்கூடம்.

அந்த இடத்திற்கு ரொம்ப மரியாதை கொடுக்க வேண்டும். ஆசிரியப் பெருமக்களை உயர்வாக எண்ண வேண்டும். உங்களுடைய மனநிலை மாற வேண்டும். பள்ளிக்கூடங்களில் வன்முறையில் ஈடுபடுவது சட்டப்படியும் குற்றம். ஆதலால் தயவுசெய்து மீண்டும் இந்த குற்றத்தை நீங்கள் செய்யாதீர்கள்’ என்று மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.