கொத்தடிமை மாதிரி நடத்துறாங்க, முதல்வர் உதவ வேண்டும் - ஸ்விக்கி ஊழியர்கள் திடீர் போராட்டம்!
தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு நாள் ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம்
தற்போதைய டிஜிட்டல் உலகில், அனைத்தும் ஆன்லைன் ஷாப்பிங் என மாறியுள்ளது. எந்த பொருட்கள் மற்றும் உணவுகள் எடுத்தாலும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.
இதில் ஸ்விக்கி, ஜெமெட்டோ போன்ற ஆப்கள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடும் வசதி வந்துள்ளது.
தற்போது உணவு டெலிவர் செய்யும் முக்கிய நிறுவனமான ஸ்விக்கியில் பணியாற்றும் ஊழியர்கள், தமிழகத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் பகுதிகளில் இருக்கக்கூடிய ஸ்விக்கி ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் வரை இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிபந்தனைகள்
இந்நிலையில், அவர்கள் வைக்கும் கோரிக்கைகள், "புதிய ஸ்லாட்டு முறை திரும்ப பெற வேண்டும், ஏற்கெனவே வழங்கி வந்த டர்ன் ஓவர் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்.
ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். ஆர்டர் எடுக்கும் போது ஒரு ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க வேண்டும்" முதலியவற்றை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது இந்த போராட்டம் குறித்து ஒரு ஊழியர் பேசியதில், "ஆரம்ப காலத்தில் வழங்கிய சலுகைகள் அனைத்தையும் ஸ்விக்கி நிர்வாகம் நிறுத்திவிட்டது.
இதை கண்டித்துதான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். கொத்தடிமை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 115 டிகிரி வெயில் அடிக்கிறது.
இந்த சூழலில் நெருப்புல போறா மாதிரி இருக்கு. கொரோனா காலம், வெயில், மழை, புயல் என எல்லா காலத்திலும் பொதுமக்களுக்கு உணவு டெலிவரி செய்துவருகிறோம்.
தமிழக முதல்வரும், பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும்." என்று கூறியுள்ளார்.