கருவுற்ற தாய்மார்கள் இறப்பு அதிகரித்துள்ளது - சு. வெங்கடேசன் எம்.பி. வேதனை
இந்தியாவில் கருவுற்ற தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை சர்வேயர் காலனி பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டம் வழங்கும் முகாமில் கலந்து கொண்ட மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், எம்.பி. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மூன்று பிரிவினரை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி உள்ளதாக கூறினார்.
இதில் கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவச் செல்வங்களை எப்படி கவனித்துக் கொள்வது? என்பது மிகுந்த கவலையாக உள்ளது. குறிப்பாக கருவுற்ற தாய்மார்களுக்கு எந்த மாதிரியான தடுப்பூசிப் போடுவது? என மத்திய அரசு முடிவு எடுக்காமல் உள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். ஐரோப்பிய நாடுகளில் கருவுற்ற தாய்மார்களுக்கான தடுப்பூசிப் போடுவதற்கான முடிவெடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் எந்த மாதிரியான தடுப்பூசிப் போடுவது? என்று முடிவு எடுக்காமல் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான தாய்மார்கள் கருவுற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தடுப்பூசிப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கருவுற்ற தாய்மார்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கருவுற்ற தாய்மார்களுக்கு என்ன மாதிரியான ஊசி செலுத்துவது? என்று மத்திய அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.