நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை - என்ன காரணம்?
நடிகர் எஸ்.வி.சேகருக்கு அளிக்கப்பட்ட ஒரு மாதம் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
எஸ்.வி.சேகர்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் எஸ்.வி.சேகர். நடிப்பது மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டு வந்த இவர், 2006 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என பல கட்சிகளில் பயணித்து வந்த இவர், தற்போது அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.
அவதூறு கருத்து
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு அவற்றின் பேச்சை கண்டித்து போராட்டங்களும் நடைபெற்றன.
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
சிறை
அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே தாம் பகிர்ந்ததாகவும் அதற்காக உடனடியாக மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டுமென என எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீடு வழக்கு, இன்று(02.01.2024) விசாரணைக்கு வந்த நிலையில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசம் வழங்கி, அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது" என தெரிவித்துள்ளது.