கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி - சத்தியமங்கலத்தில் பரபரப்பு!
சத்தியமங்கலத்தில் தனியார் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் கிருத்திகா இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் கடந்த 15ம் தேதி கல்லூரியில் செய்முறை பயிற்சிக்காக கல்லூரி வந்துள்ளார். இவருடன் தங்கும் விடுதி அறையில் தங்கி இருந்த மாணவிகள் ஊருக்கு சென்று விடவே மாணவி கிருத்திகா மட்டும் தனியாக விடுதி அறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் கிருத்திகா தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் அருகே உள்ள அறையில் இருந்த மாணவிகள் சந்தேகமடைந்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவி தங்கி இருந்த அறையின் கதவை தள்ளி திறந்து பார்த்த பொழுது மாணவி கிருத்திகா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் மாணவி கிருத்திகாவின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் , மாணவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் கல்லூரிகள் செயல்படாத வேலையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்திய மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.