நியூசிலாந்து அணியை கதறவிட்ட சூர்யகுமார் யாதவ் - இந்தியா 191 ரன்கள் குவிப்பு
நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்துள்ளது.
2வது டி20 போட்டி
இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான இஷான் கிஷன் 36 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன்னும் குவித்தார்.
நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 13 ரன்களில் தேவை இல்லாமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
கதறவிட்ட சூர்யகுமார் யாதவ்
இதன்பின் ஹர்திக் பாண்டியாவுடன் கூட்டணி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தார்.
சிக்ஸர், பவுண்டர்கள் அசால்டாக விளாசி 32 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், அடுத்த 17 பந்துகளில் சதத்தையும் பூர்த்தி செய்து மாஸ் காட்டினார்.
போட்டியின் 19வது ஓவரில் 22 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை மிரளவிட்ட சூர்யகுமார் யாதவிற்கு, கடைசி ஓவரில் ஒரு பந்து கூட கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோர், டிம் சவுத்தியின் பந்துவீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறி சொதப்பியதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 191 ரன்கள் எடுத்துள்ளது.