ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய சூர்யகுமார் யாதவ் - என்ன காரணம்?

Mumbai Indians TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan May 10, 2022 09:48 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது.மும்பை சார்பில் பும்ரா 5 விக்கெட், குமார் கார்த்திகேயா 2 விக்கெட், டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய மும்பை அணியில் இஷான் கிஷன் மட்டும் பொறுப்புடன் விளையாடி 51 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் அந்த அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 11 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை அணி 2 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் புள்ளிப்பட்டியலில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தாலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்துவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் உள்ளதால் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே அந்த அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் வலது கையில் காயம் ஏற்பட்டு தான் தாமதமாக ஐபிஎல் தொடருக்கு வந்தார். தற்போது இடதுகையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் விலகியுள்ளார். 

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தென்னாப்பிரிக்க அணியுடனான டி20 தொடர் நடக்கவுள்ளது. இதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதால் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் இடமான இந்த தொடர் பார்க்கப்படுகிறது. எனவே அதற்கு தயாராகவே அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.