சூர்யகுமார் யாதவ் செய்த வரலாற்று சாதனை - குவியும் பாராட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிகப்பட்சமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் விளாசினார். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார் சூர்யகுமார். தன்னுடைய முதல் போட்டியில் 31 ரன்கள் எடுத்திருந்தார்.
அதன்பின் இதுவரை மொத்தம் 6 ஒரு நாள் போட்டியில் ஆடியுள்ள சூர்யகுமார், 31*, 53, 40, 39, 34* மற்றும் 64 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், தன்னுடைய முதல் ஆறு ஒரு நாள் போட்டியிலும் 30 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன் ரியான் டென் டொஸ்கேத், டாம் கூப்பர் மற்றும் பகர் சமான் ஆகியோர்,தங்களுடைய முதல் 5 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே 30 ரன்கள் எடுத்திருந்தனர். தன்னுடைய வாய்ப்பினை சிறப்பான முறையில் கையாண்டு வரும் சூர்யகுமார் யாதவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.