‘’தமிழ்நாட்டில இனிமே ஒரு சூர்யா படம் ஒடாது ’’ - வன்னியர் சங்கம் எச்சரிக்கை

warning jaibhim vanniyarsangam suryamovie
By Irumporai Nov 24, 2021 01:06 PM GMT
Report

ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, லிஜோமோல் ஜோஸ்,மணிகண்டன்,ரஜீஷா விஜயன்,பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் நவம்பர் 2-ம் தேதி ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக OTT தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகி மக்களிடையே அமோக வெற்றி பெற்று இந்திய அளவில் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது

ஆனால்,  மற்றொரு புறம் படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினரிடமிருந்தும் வன்னியர் சமூகத்தினரிடம் இருந்தும் பலத்த எதிர்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது.

படத்தில் வன்னியர் சமூகத்தினரை இழிவு படுத்து வகையில் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது என குற்றம் சாட்டும் இவர்கள் ஜெய் பீம் படம் வெளியானது முதல் தொடங்கி இன்றுவரையும் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் திருவாரூர் கீழ வீதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் விளமல் வழியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்தினர்.

மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்தியிடம் கோரிக்கை மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சிவசுப்ரமணியன் உடனடியாக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் தமிழ்நாட்டில் ஒரு திரையரங்குகளில் கூட நடிகர் சூர்யா படம் வெளியிட முடியாது .

இந்த விஷயத்தில் கட்சிகள் பாகுபாடின்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள வன்னியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளோம். சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தார்