ஏழை, எளிய மக்களுக்காக நவீன ரக காரை நன்கொடையாக வழங்கிய நடிகர் சூர்யா - குவியும் பாராட்டு
நடிகர் சூர்யா ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலம் ஏராளமான ஏழை மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார்.
அதேபோல் ‘ஜெய்பீம்’ படத்தில் வாங்கிய பணத்தை பழங்குடியின மக்களின் நல வாழ்விற்காக தமிழக அரசிடம் வழங்கினார்.
இதனையடுத்து, ஷுட்டிங்கில் கட்டப்பட்ட 3 வீடுகளை வீணடிக்காமல் ஏழைகளுக்கு வழங்க நடிகர் சூர்யா முடிவெடுத்துள்ள செயல் பலரை நெகிழ்ச்சியடைய வைத்தது.
சென்னை மாநகர காவல்துறை, ‘காவல் கரங்கள்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. இந்த இயக்கம், பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் கஷ்டப்படும், ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவி செய்து வருகிறது.
இந்நிலையில், சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக ‘காவல் கரங்கள்’ இயக்கத்திற்கு வழங்கியுள்ளார். இந்த கார் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவதற்கு பயன்படும்.
இந்த காரை இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டாக்டர் சரண்யா ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கொடியசைத்து பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளனர்.
நடிகர் சூர்யா நவீன ரக காரை நன்கொடையாக வழங்கியதையடுத்து, அவரது ரசிகர்கள் நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.