‘விக்ரம்’ பட பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - சுவாரஸ்ய தகவல்!
மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்ததாக கார்த்தியுடன் கைதி படத்தை இய்யகினார். அதுவும் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் உருவெடுத்தார்.
தனது 3-வது படத்திலேயே தளபதி விஜய்யுடன் கைக்கோர்த்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் 2020-ம் ஆண்டு கமல் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பெரும் வரவேற்பை பெற்றது.கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் முக்கிய படங்களில் ஒன்றான ‘விக்ரம்’ உலகம் முழுக்க வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கமல் குரலில் பாடியுள்ள படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ நேற்று முந்தினம் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதனை தொடர்ந்து படத்திலிருந்து மற்றொரு போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் கமல் இருக்கிறார். அவருடன் விஜய் சேதுபதியும் ஃபஹத் ஃபாசிலும் கூலாக நிற்கிறார்கள்.
இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வரும் மே 15-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடத்தி வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி நாளை நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்கள் என இணையத்தில் செய்திகள் பரவியது.
இதனையடுத்து, நாளை விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய்- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் ரசிகர்கள் டபிள் சந்தோஷத்தில் உள்ளனர்.