அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய குரல், அரசியலால் மடைமாற்றப்படுகிறது : அன்புமணி ராமதாஸிற்கு நடிகர் சூர்யாவின் ரிப்ளை

suriya jaibhim anbumaniramadoss replayletter
By Irumporai Nov 11, 2021 02:32 PM GMT
Report

 த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம்  படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் படத்தில் ஒரு காட்சியில் உதவி காவல் ஆய்வாளர் குருமூர்த்தி இல்லத்தில் அக்னி சட்டி இடம் பெற்ற காலண்டர் பின்னணியில் தொங்க விடப்பட்டிருக்கும்.

எனவே அது குறிப்பிட்ட சாதியினரை குறிப்பிடுவதாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர். படக்குழுவினருக்கு கடும் கண்டனங்களும் எழுந்தன.

பின்னர் அந்த காட்சியில் காலண்டரில் இடம் பெற்றிருந்த படம் மாற்றப்பட்டது.

இப்படியாக படத்தில் பல காட்சிகளில் வன்னியர்களை இழிவு படுத்தியிருப்பதாகக் கூறி மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது அந்தக் கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சூர்யா அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன் சாரம்சம் பின் வருமாறு :

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு , வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன் .

என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி .

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், 'அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது' என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு.

பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல், எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ , சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை.

சிலர் சுட்டிக்காட்டிய பிழையும் , உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன். 'படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை' என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன்.

அதேபோல, ' படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்' என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். jai bhim ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல.

'இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்' என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் , அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி , மத , மொழி , இன பேதம் இல்லை . உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு .

படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட ' பெயர் அரசியலுக்குள்' சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார் . எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால் , அதற்கு முடிவே இல்லை.

அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ' பெயர் அரசியலால் "மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது, அன்புடன், சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன்.

நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.