செந்தில் பாலாஜிக்கு தொடங்கியது அறுவை சிகிச்சை - 3 ரத்த குழாய்களில் அடைப்புகளை அகற்றும் மருத்துவர்கள்..!
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் உள்ள 3 ரத்த குழாய்களில் உள்ள அடைப்பை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதயத்தில் அடைப்பு
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த வழக்கில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப் பட்டது. அதனைத்தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் அவர் காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடங்கியது அறுவை சிகிச்சை
அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அதன்பேரில் இன்று (ஜூன் 21) அதிகாலை நான்கு மணி முதல் அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
அவருக்கு மயக்க மருந்து நிபுணர்கள் உதவியுடன் காலை 7 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளதாகவும், நான்கு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை இந்த அறுவை சிகிச்சை நடைபெறும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பின், மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.