ஆபரேஷனை மாற்றி செய்த அரசு மருத்துவர்கள் - கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்
கோவில்பட்டியில் மூதாட்டி ஒருவருக்கு வலது காலில் ஏற்பட்ட வலிக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த மணி முருக குமார் என்பவரது மனைவி குருவம்மாள். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் அவர் தனியாக வசித்து வந்தார்.
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் வலதுகால் மூட்டுப்பகுதியில் வலி இருப்பதாக கூறி குருவம்மாள் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றார். கிட்டதட்ட 3 மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி மருத்துவமனை சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர் வலதுகாலில் சிறிய ஆபரேஷன் செய்தால் வலி குணமாகிவிடும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. ஆனால் வலது காலுக்கு பதிலாக இடது காலில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாக மூதாட்டி குருவம்மாள் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். இதனால் தனக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிடுவதுடன் மருத்துவர்கள், செவியலியர்கள், இடைத் தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.