“ஆபரேஷனின் போது அழுவியா? ... அப்ப அதுக்கும் சேர்த்து பில் கட்டு” - அதிர வைத்த மருத்துவமனை
அமெரிக்காவில் ஆபரேஷனின் போது அழுததற்காக மருத்துவமனை நிர்வாகம் நோயாளியிடம் கட்டணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அறுவை சிகிச்சை என்றாலே நம் பயம் தரக்கூடியதாக தான் இருக்கும். அந்த நேரத்தில் பயத்தில் மருத்துவர்களின் கையை பிடித்து இழுப்பது, அழுவது, கத்துவது போன்ற செயல்களில் நோயாளிகள் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் மிட்ச் என்ற பெண்மணி மச்சத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் பயந்த சுபாவம் கொண்ட மிட்ச் உணர்ச்சிவசப்பட்டு ஆபரேஷனின் போது பயத்தில் அழுதிருக்கிறார். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் தரப்பட்ட பில்லை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். அதில் Brief emotion என்ற பெயரில் அழுததற்காக கட்டணமாக 11 டாலர்கள் தொகை மருத்துவமனை கட்டண ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மச்சத்தை அகற்றுவதற்கு 223 டாலர்களும், அப்போது அழுததற்காக 11 டாலர்களும் கட்டணம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மிட்ச் மருத்துவமனை கட்டண ரசீதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த அழுகை கட்டண விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.