ஒரு வழியாக ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மெகா ஏலத்தில் பல வீரர்களும் மற்ற அணிகளால் வாங்கப்பட்டதால் இந்த தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கப் போகிறது.
இதனிடையே ஐபிஎல் ஏலத்தில் மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் சென்னை அணியின் நட்சத்திர வீரர் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை எப்படியாவது ஏதாவது ஒரு அணி சேர்க்க வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சுரேஷ் ரெய்னா கடந்த 2019 ஆண்டுக்கு பின் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் மோசமான பார்மில் இருந்து வந்தார்.
இந்நிலையில் ரெய்னாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஐபிஎல் தொடரின் வர்ணனையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் இணைந்து சுரேஷ் ரெய்னா ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஐபிஎல் போட்டிகளின் ஹிந்தி வர்ணனையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டு வருவதால் ரசிகர்கள் ஆவலோடு இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.