பெண் நிருபரிடம் அத்துமீறிய முன்னாள் பாஜக எம்.பி.யான 'தீனா' பட நடிகர் - வலுக்கும் கண்டனம்!
மலையாள நடிகரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான சுரேஷ் கோபி பெண் நிருபரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அநாகரிக செயல்
கேரளா: மலையாள சினிமாவின் முன்னணி நடிகரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமாக இருந்தவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் அஜித்துடன் தீனா மற்றும் விக்ரமின் ஐ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சுரேஷ் கோபி நேற்று கோழிக்கோட்டில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது பெண் நிருபர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சுரேஷ் கோபி பதிலளிக்கும்போது மகளே என்று கூறி அந்த பெண் நிருபரின் தோள் மீது கை வைத்துள்ளார்.
அந்த செயலால் பெண் நிருபர் பின்னால் நகர்ந்து சென்றார். பின்னர் இரண்டவது முறையும் அந்த பெண் கேள்வி எழுப்பியபோது, மீண்டும் சுரேஷ் கோபி தோளில் கை வைத்துள்ளார். உடனே அந்த பெண் அவரின் கையை தள்ளி விட்டார்.
கடும் கண்டனம்
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து சுரேஷ் கோபியின் அந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பெண் நிருபரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக, கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் சுரேஷ் கோபி மீது போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சுரேஷ் கோபி தெரிவித்துள்ளதாவது "அந்த பெண் செய்தியாளர், என் வழியை பலமுறை மறைத்தார். அதன் காரணமாகவே அவரை நான் அவரை லேசாக நகர்த்த முயன்றேன்.
நான் ஒரு அப்பாவை போல, அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்க தொடர்பு கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.