காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை ... இளைஞருக்கு தூக்கு தண்டனை
குஜராத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த கிரிஸ்மா வெகரியா (21) என்ற கல்லூரி மாணவியை, அவர் படிக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த பெனில் கோயானி என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் அவரது காதலை கிரிஸ்மா ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கோயானி கடந்த பிப்ரவரி மாதம் கிரிஸ்மாவை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். இதனை தடுக்க வந்த அவரது தம்பி மற்றும் மாமாவுக்கும் கத்திக்குத்து விழுந்தது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோயானி மீதான வழக்கு சூரத் முதன்மை நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி வி.கே.வியாஸ் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள கிரிஸ்மாவின் பெற்றோர் குற்றவாளிக்கு விரைவில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.