நீதிபதி கலையரசன் ஆணையம் என்னை விசாரிக்க முடியாது - சூரப்பா
அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்ச்சைக்குரிய துணைவேந்தர் சூரப்பா சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
சூரப்பா அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தன. தமிழகத்தைச் சாராத ஒருவரை நியமிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
அண்ணா பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி ஒப்பந்தங்கள் வரை சூரப்பா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் உயர்சிறப்பு மிக்க நிறுவனம் என்கிற அந்தஸ்தை வழங்க வேண்டும் என தமிழக அரசை மீறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைத்திருந்தது.
ஆனால் அந்த ஆணையத்தின் விசாரணையை சூரப்பா எதிர்த்து வந்தார். தற்போது தான் ஓய்வு பெற்றுவிட்டதால் நீதிபதி கலையரசன் ஆணையம் தன்னை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் சூரப்பா தரப்பு தெரிவித்துள்ளது.