டெஸ்ட் போட்டிகளில் இருந்து பிரபல வீரர் ஓய்வு - ரசிகர்கள் சோகம்
இந்தியாவுடனான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக பிரபல இலங்கை வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்த போட்டியுடன் இலங்கை வீரர் சுரங்கா லக்மல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமான இவர் இதுவரை 86 ஒருநாள் போட்டிகளிலும், 70 டெஸ்ட் போட்டிகளிலும், 11 டி20 போட்டியிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.
தற்போது 35 வயதாகும் தன்னால் இன்னும் 2 ஆண்டுகள் கூட கிரிக்கெட் விளையாட முடியும் என கூறியுள்ள லக்மல், இந்த இரண்டு ஆண்டுகளில் நான் விளையாடுவதை விட என்னுடைய இடத்தில் ஒரு இளம் வீரர் வந்து விளையாடுவதை தான் சிறப்பாக கருதுவதாக கூறியுள்ளார். மேலும் நிச்சயம் இலங்கை அணி எதிர்காலத்தில் நல்ல வீரர்களை ஊக்குவித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தான் நம்புவதாக சுரங்கா லக்மல் கூறியுள்ளார்.