இந்தியா ஒன்னும் சத்திரமில்ல; இலங்கை தமிழர் வழக்கு - உச்சநீதிமன்றம் காட்டம்
இலங்கை தமிழர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இந்தியா சத்திரம் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர் மனு
இலங்கைத் தமிழர் ஒருவர் தமிழகத்திற்கு விசா பெற்றுக் கொண்டு தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். அவர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட பிரிவு (உபா) பாய்ந்த நிலையில்,
கைது செய்யப்பட்ட 7 வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த சிறைவாசம் முடிந்த பின்னர் அவரை தாயகத்துக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
அதில், நாங்களே ஏற்கனவே 140 கோடி மக்கள் தொகையுடன் அவதிப்படுகிறோம். இந்தியா ஒன்றும் வெளிநாட்டு நபர்களை அனுமதிப்பதற்கு சத்திரமோ, சாவடியோ அல்ல. இலங்கையில் மனுதாரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால், அவர் வேறு நாடுகளுக்கு செல்லலாம். சட்டப்படிதான் அவர் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
இதனால் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 21-ஐ மீறியதாக கருத முடியாது. இதே போல இந்தியாவில் வசிப்பதற்கான உரிமையை அளிக்கும் சட்டப்பிரிவு 19-ஆனது இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.