ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதால் சிகிச்சை பெற்று நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனால் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களுடைய ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்க தயாராக இருப்பதாகவும் அதற்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தது. அதில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இதனை பிரமாண பத்திரமாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த தீர்ப்பில், “ஆக்சிஜன் உற்பத்தியை தவிர வேறு எதற்கும்அனுமதி இல்லை.ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்க ஐந்து பேர் கொண்ட நிபுணர்கள் குழு கண்கானிக்கும்.
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் 5 நிபுணர்களை தேர்வு செய்யும். உள்ளூர் மக்கள் கொண்ட மேற்பார்வை குழுவை நிபுணர் குழு நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் அனைத்தும் மத்திய அரசின் தொகுப்புக்குச் செல்லும் மத்திய அரசு தான் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையை இயக்குவதற்கு 250 ஊழியர்கள் வரை தேவை என ஸ்டெர்லைட் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் தமிழகத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுக்க முடியாது. தமிழக அரசுக்கு கூடுதல் தேவை ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.