திருநங்கைகள் ரத்த தானம் செய்யத் தடை- பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
நாட்டில் திருநங்கைகள் ரத்த தானம் செய்ய தடை விதிக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தொடரப்பட்டது. இந்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ரத்த தானம் வழங்குவதற்கான வழிமுறைகளை விளக்கும் அரசியலமைப்புச் சட்டம் 2017ன் கீழ் 12 மற்றும் 51 ஆகிய பிரிவுகள், நாட்டில் திருநங்கைகள் ரத்த தானம் வழங்குவதை தடை செய்திருக்கிறது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தொடரப்பட்டது. இந்த பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது, திருநங்கைகள் ரத்த தானம் கொடுக்க தடை செய்யும் சட்டப்பிரிவுகளை நிறுத்தி வைக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இது மருத்துவத் துறை சார்ந்த விஷயம் என்பதால் இந்த விவகாரத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாது. எனவே இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்படும் என்று நீதிபதிகள் பதிலளித்துள்ளனர்.