சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் இப்படித்தான் வழங்கப்படும்...!

Supreme court Cbse exam
By Petchi Avudaiappan Jun 22, 2021 01:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 10, 11, 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் சிபிஎஸ்இ மதிப்பிடும் முறையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

கொரோனா 2வது பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு ஆலோசனைக்கு பிறகு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் தனித் தேர்வர்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்களுக்கும் மீண்டும் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பல்வேறு கல்வி வாரியங்களும் சிபிஎஸ்இ மாணவர்களும் பெற்றோர்களும் பொதுத் தேர்வு ரத்து செய்யபட்டதை எதிர்த்தும் மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த நீதிபதிகள் சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யும் முடிவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர். அத்துடன் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு மற்றும் மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தனர்.