யாருக்கு ஆதரவு? ரஜினிகாந்த் ஓரிரு நாளில் வாய்ஸ்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரும் தேர்தலில் என்ன நிலைப்பாடு அல்லது யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 1996 தேர்தலின்போது யாருக்கு ஆதரவு என்பது குறித்து முதன்முறையாக ரஜினிகாந்த் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.
அவரது அன்றைய பேச்சு ரசிகர்கள் மட்டுமின்றி, வாக்காளர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர்கள் திமுக - தமாகா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு கடுமையாகவே உழைத்தார்கள். அதுமுதல் ஒவ்வொரு பொதுதேர்தலின்போதும் ரஜினிகாந்தின் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு எழுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
ஆனால், இந்த முறை தேர்தலுக்கு முன் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கட்சி தொடங்காதது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ரஜினிகாந்தின் முடிவை ஏற்க முடியாமல் அவரது ரசிகர்கள் இன்னமும் நிலைகுலைந்துள்ளனர். இப்போது தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தலைவரிடமிருந்து குரல் வருமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரஜினியுடன் சேர்ந்த அர்ஜூனமூர்த்தி, தொடங்கியுள்ள இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் இருக்கிறது
ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் வரும் ரோபோக்களை போன்றே அர்ஜூனமூர்த்தி கட்சிக்கு ரோபோ சின்னம் கிடைத்துள்ளது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் விவாதமாக வைக்கப்பட்டுள்ளது