கோலாகலமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே - பட்டத்தை தட்டிச்சென்ற ஸ்ரீதர் சேனா!
சூப்பர் சிங்கர் 8வது சீசனின் டைட்டில் வின்னராக ஸ்ரீதர் சேனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை 7 சீசன்களை நிறைவு செய்துள்ள இந்நிகழ்ச்சியின் 8 சீசன் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு வாரம் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வரும் தங்களது தனி திறமையை வெளிப்படுத்தி வந்தனர்.
நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் முகம் தெரியாத பாடகர்களாக வரும் இவர்கள், போட்டி முடியும்போது ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்று பிரபலமாகி விடுகின்றனர். இறுதிக்கட்டத்தை எட்டிய இந்நிகழ்ச்சியில் அபிலாஷ், பரத், அணு, ஸ்ரீதர் சேனா, முத்து சிற்பி, மானசி என ஆறு பேர் போட்டிக்கு தேர்வாகியிருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே மிகவம் பிரம்மாண்டமாக நேற்று தொடங்கியது.
சுமார் ஆறரை மணி நேரம் நேரலையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், எஸ்.பி.பி.சரண் ஆகியோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் டைட்டில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உலக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் 33 லட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று சூப்பர் சிங்கர் 8வது சீசனின் டைட்டில் வின்னராக ஸ்ரீதர் சேனா தேர்வானார்.
பரத் இரண்டாவது இடத்தையும், அபிலாஷ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு டைட்டில் வின்னருக்கு ரூபாய் 10 லட்சம் ரொக்க பரிசு வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பிரபல இசை பாடகர்களான சித்ரா, மால்குடி சுபா, அனந்த் வைத்தியநாதன், கல்பனா, தீ, சந்தோஷ் நாராயணன், ஹரிஷ் கல்யாண், செஃப் தாமு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.