இனி சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் வாங்கலாம் - வெளியான புதிய அறிவிப்பு
சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரஸ்-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மதுபான கடைகளில் மட்டுமே ஒயின் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தகவலில், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் 100 சதுர மீட்டர், அதற்கு மேல் உள்ள வாக்-இன் கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் வழிப்பாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மதுவிலக்கு அமலில் உள்ள மாவட்டங்களிலும் கடைகளில் மதுவிற்பனை செய்ய முடியாது. இதேபோல ஒயின் விற்பனை செய்ய கடைகள் அரசுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.
பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி நவாப் மாலிக் கூறினார்.
எனினும் மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,
“மராட்டியத்தை மத்திய-ரஸ்தா (மது மாநிலம்) மாநிலமாக்க நாங்கள் விடமாட்டோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் மாநில அரசு பொது மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆனால் அதன் மதுவை ஊக்கப்படுத்துவது அதன் முக்கியத்துவமாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.