இனி எல்லா சேவைகளும் ஒரே செயலியில்; வருகிறது 'Super App' - ரயில்வே சூப்பர் திட்டம்!
ரூ.90 கோடி செலவில் 'சூப்பர் ஆப்' என்ற செயலியை உருவாக்கும் பணிகளை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
ரயில் சேவை
இந்தியாவில் லட்சக்கணக்கான பயணிகள் நாள்தோறும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். தொழில் நுட்ப வசதி வளர்ந்துள்ள தற்போதைய காலத்தில் பலரும் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள்.
அதற்காக கடந்த 2014-ம் ஆண்டு பயணிகளின் வசதிக்காக ஐ.ஆர்.சி.டி.சி மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த புக்கிங் செயலி போக புறநகர் ரயில் டிக்கெட்டுகளுக்காக யூடிஎஸ் செயலி மற்றும் ரயில்கள் எங்கு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்வதற்கான செயலி என தனித்தனி செயலிகளை பயணிகள் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டியுள்ளது.
'சூப்பர் ஆப்
எனவே அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே செயலியின் கீழ் கொண்டு வர ரயில்வே திட்டமிட்டது. அதற்காக ரூ.90 கோடி செலவில் 'சூப்பர் ஆப்' என்ற செயலியை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்கான பணிகள் சுமார் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேயின் பிற செயலிகளான PortRead, Satark, TMS-Nirikshan, ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட், ஐஆர்சிடிசி இகேட்டரிங், ஐஆர்சிடிசி ஏர் என 12-க்கும் மேற்பட்ட ரயில்வே செயலிகள் ஒரே செயலியாக ஒருங்கிணைத்து கொண்டு வரப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பயணிகள் ஒரே செயலியின் மூலமாக ரயில்வே சேவைகளை பெற முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.