"அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது, நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? " - சன்னி லியோன் பேட்டி

interview sunny leone expresses discomfort over 2016 interview
By Swetha Subash Jan 02, 2022 12:06 PM GMT
Report

2016-ஆம் ஆண்டு பங்கேற்ற தொலைக்காட்சி நேர்காணலினால் மன வேதனை ஏற்பட்டது என்றும், அந்த சம்பவம் தன்னை மிகவும் பாதித்தது என்றும் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.

இந்தியில் பிரபல நடிகையாகவும், நடன கலைஞருமான சன்னி லியோனுக்கு ரசிகர்கள் அதிகம். இந்தியாவில் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சன்னிலியோன் தற்போது தமிழில் வீரமாதேவி, ஷெரோ என்ற தமிழ் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் பேயாக நடித்து வருகிறார். இது மட்டுமின்றி மலையாளத்தில் ரங்கீலா, இந்தியில் கோகோ கோலா, ஹெலன் என்ற படங்களில் நடித்து வருகிறார்.

தி பாட்டில் ஆப் பீமா கோர்கான் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளார். 2012ம் ஆண்டு முதல் இந்தியாவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில், பாலிவுட் சினிமா செய்திகளை வெளியிடும் தனியார் இணையதளம் ஒன்றிற்கு சன்னி லியோன் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் 2016-ம் ஆண்டு பங்கேற்ற தொலைக்காட்சி நேர்காணலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற அந்த நேர்காணலில் சன்னி லியோனின் கடந்த கால வாழ்க்கை, அவர் ஆபாச படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து அந்த தொகுப்பாளர் கேள்வி கேட்டது சன்னி லியோனுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக சன்னிலியோன் கூறியிருப்பதாவது, ”அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதிலிருந்து வெளியேற அந்த தொகுப்பாளர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார்.

அது என் உணர்ச்சிகளை பல மடங்கு காயப்படுத்தியது. அந்த அறை முழுவதும் நாற்காலிகள் வரிசையாகவும், அந்த வரிசையில் மக்களும் அமர்ந்திருந்தார்கள்.

நான் உடனே எந்த வகையிலாவது நான் உங்களை காயப்படுத்தினேனா? இதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? யாருமே நிறுத்த நினைக்கவில்லையா?” என்று கேட்டேன்.

கற்பனை செய்து பாருங்கள். இது சரியல்ல, ஒருவர்கூட இதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் ஏதேனும் செய்துவிட்டேனா? என்று கூட கேட்டேன்.

ஆனால், யாரும் உதவவில்லை. அந்த கேள்விகள் ஏற்கனவே என்னிடம் என்னைப்பற்றி கேட்கப்பட்டவைதான். ஆனால், அந்த கேள்விகளை கேட்ட விதம் என்னை மேலும் காயப்படுத்தியது என்று கூறியுள்ளார்.

அந்த நேர்காணலுக்கு பிறகு சன்னிலியோனுக்கு பாலிவுட் பிரபலங்களும், பொதுமக்களும் மிகுந்த ஆதரவு அளித்தனர்.

அந்த நேர்காணலை எடுத்த தொகுப்பாளருக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

சமீபத்தில் கூட சன்னிலியோன் நடனத்தில் உருவான பழைய இந்தி பாடல் ரீமேக்கிற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள இந்து அமைப்புகள், சாமியார்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.