“இதை கோலி சொல்லாமல் இருந்திருக்கலாம், அதுதான் அவருக்கு எதிராகப் போய்விட்டது” - சுனில் கவாஸ்கர்
விராட் கோலியை ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது பெரிய சர்ச்சைகளைக் கிளப்ப, அதன் பிறகு கோலியே அளித்த பேட்டி பெரிய சர்ச்சைகளுக்குக் காரணமாக அமைந்தது.
ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து முன்னறிவிப்பின்றி தான் நீக்க்கப்பட்டதாகவும் கங்குலி கூறியது போல் யாரும் என்னிடம் வந்து டி20 கேப்டன்சியை விட்டு போக வேண்டாம் என்று கூறவும் இல்லை என்று விராட் கோலி கூறியதன் மூலம் பிசிசிஐ-யின் செயல்பாட்டிலும் கங்குலியின் கருத்து நேர்மையிலும் சந்தேகம் எழுந்தது.
ஆனால் இதற்குப் பதில் அளித்த கங்குலி, கோலியின் பேட்டி தொடர்பாக எந்த கருத்தும் கூற முடியாது எனவும் இது குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
கேப்டன்ஷிப் குறித்த விராட் கோலியின் கருத்துக்களுக்கு நேரடியாக பதிலளிக்க பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
அதை கிரிக்கெட் வாரியத்திடம் விட்டு விடுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், என மட்டுமே கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக விராட் கோலி கூறிய அந்த ஒரு வாக்கியம் அதிகாரத்தில் இருப்பவர்களை எரிச்சலடையச் செய்திருக்கலாம் என்கிறார் கவாஸ்கர்.
அவர் கூறும்போது, "டி20 கேப்டன்சியிலிருந்து கோலி விலகியதை அறிவித்த அறிவிப்பில் கூறிய ஒரு வாக்கியம் அதிகாரத்தில் இருப்பவர்களை சீண்டியிருக்கும்.
நான் சரியாக நினைவில் வைத்திருந்தால் கோலி கூறியது இதுதான், 'நான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன்' என்றார்.
இந்த ஒரு லைனை அவர் சொல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது 'ஒருநாள், டெஸ்ட் அணியை நான் வழிநடத்த சித்தமாயிருக்கிறேன்' என்று கூறியிருக்கலாம்.
ஆனால் நான் ஒருநாள், டெஸ்ட் கேப்டன்சியில் நீடிப்பேன் என்று கூறியிருக்கக் கூடாது.
இந்த வார்த்தைதான் அவருக்கு எதிராகப் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன். இல்லையெனில் இவ்வளவு வெற்றிகள் பெற்றுத்தந்த ஒருவரை நீக்குவதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.
அவரது தலைமைத்துவப் பண்புகளை சந்தேகிப்பதற்கு எதுவும் இல்லை. அவர் நான் நீடிப்பேன் என்று கூறிய ஒரு வார்த்தை அவருக்கு பிரச்சனையாக இருக்கலாம், என்றார் சுனில் கவாஸ்கர்.