விராட் கோலி இப்படி சொதப்புவதற்கு இதுவே காரணம் - கவாஸ்கர் சொல்லும் காரணம் என்ன?
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடர்ந்து சொதப்பிய விராட் கோலியின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 9 ஆம் தேதி நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும், நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அசத்தியது. இதனிடையே இந்த 3 போட்டிகளிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 71 வது சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 3 போட்டிகளையும் சேர்த்து அவர் மொத்தம் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
அதில் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் போட்டியின் போது கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஆனால் விராட் கோலிக்கு கடந்த பல போட்டிகளாகவே நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். அவர் தற்போது ஃபார்மில் இல்லை என நினைக்கிறேன். அதேநேரம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் அவர் அரைசதம் அடித்ததை மறந்திடக் கூடாது என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.