ரஷ்யா - உக்ரைன் போர் : இந்தியாவில் விலை உயரும் சூரியகாந்தி எண்ணெய்
உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக இதற்கான பணிகளில் இருந்த போது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 7வது நாட்களாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்களும், படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. இதனிடையே உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில், 80 சதவீதத்தை உக்ரைனும், 10 சதவீதம் ரஷ்யாவும் ஏற்றுமதி செய்கின்றன.
மீதமுள்ள 10 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாக உள்ளது. தற்போது இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போரால் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது.இதனால் சூரியகாந்தி, பாமாயில் எண்ணெய் விலை படிப்படியாக லிட்டருக்கு ரூ.35 வரை உயர்ந்துள்ளது.
சூரியகாந்தி எண்ணெய் ரூ.140-ல் இருந்து ரூ.175 ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் போர் முடிந்து எண்ணெய் வரத்து அதிகரித்தால் மட்டும் விலை சரியும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.