கிரிக்கெட் அணியை வாங்க உள்ள சுந்தர் பிச்சை - எந்த அணி தெரியுமா?
சுந்தர் பிச்சை கிரிக்கெட் அணியில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் பிச்சை
கூகிள் நிறுவனம் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சுந்தர் பிச்சை கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் CEO ஆக உள்ளார்.
சுந்தர் பிச்சை கிரிக்கெட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கிரிக்கெட் தொடர்பாக அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் கருத்துக்களை பதிவு செய்வார். இந்நிலையில் சுந்தர் பிச்சை கிரிக்கெட் அணி ஒன்றில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டில் முதலீடு
ஏற்கனேவே மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா அடோப் CEO சாந்தனு நாராயண் உள்ளிட்ட அமெரிக்கா வாழ் இந்திய தொழிலதிபர்கள் அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட்டில் முதலீடு செய்துள்ளனர். இதே போல் சுந்தர் பிச்சை, லண்டனில் நடைபெறும் தி ஹண்ட்ரட்டில் முதலீடு செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போல், அங்குள்ள 8 பிரபல நகரங்களின் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டு தி ஹண்ட்ரட் எனும் 100 பந்துகள் கிரிக்கெட் தொடர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் லண்டன் ஸ்பிரிட் அல்லது ஓவல் இன்விசிபிள்ஸ் என்ற இரு அணிகளில் ஒரு அணியில் சுந்தர் பிச்சை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதற்காக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, இந்த கூட்டமைப்பில் சுந்தர் பிச்சையுடன், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் CEO க்கள் உள்ளனர். இந்த கூட்டமைப்பு தி ஹண்ட்ரட் ஏலத்தில் 97 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.837 கோடி) முதலீடு செய்ய உள்ளது.