சூலூரில் வேட்புமனு தாக்கலின் போது ரூ.10,000த்தை ஒரு ரூபாய் சில்லறையாக கொடுத்த வேட்பாளர்
சூலூர் சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அப்போது ரூபாய் பத்தாயிரத்துக்கும் ஒரு ரூபாய் சில்லறையாக கொடுத்து இந்து மக்கள் கட்சியின் பொன் கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. சூலூரில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியுள்ளது.
இந்து மக்கள் கட்சியி தமிழகம் சார்பில் பொன். கார்த்திகேயன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஏழு முறை சட்டப்பேரவை தேர்தலுக்கும், இரண்டு முறை மாநிலங்களவைத் தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் பற்றி அவர் கூறியதாவது, 10,000 பொதுமக்களிடம் தலா ஒரு ரூபாய் வசூல் செய்து வேட்புமனுத்தாக்கல் பணத்தை சில்லறையாக தாக்கல் செய்ததாகவும் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பணத்துக்காக விற்கக்கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் இவ்வாறு செய்வதாகக் கூறினார்.
இந்தத் தேர்தலில் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 96 சதவீதம் இந்து மக்கள் வசிப்பதாகவும் இந்துக்களின் ஓட்டு பதிவிலேயே தான் வெல்ல போவதாக கூறினார்.
பொன் கார்த்திகேயன் தாக்கல் செய்த வேட்பு மனுவை சூலூர் சட்டப்பேரவைத் தேர்தல் அலுவலர் சாந்தி பெற்றுக்கொண்டார்.