சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த சடலம் - தண்ணீர் ஊற்றி அணைத்து போலீஸ் கொண்டு சென்றதால் பரபரப்பு
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உறவினர்கள் சடலத்தை எரிக்கும் போது போலீசார் தடுத்து நிறுத்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி, செவ்வேரி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் ராஜேஷ் (35). ராஜேஷ் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை முதல் திருமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தில் ராஜேஷுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது காலம் வந்த ரமேஷ் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
இதனையடுத்து, தொளார் கிராமத்தை சேர்ந்த சபீதா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். 4 ஆண்டுகள் ஆகியும் இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், சபீதாவிற்கும் ராஜேஷ்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
தூக்கிட்டு தற்கொலை
இதனையடுத்து, நேற்று மாலை ராஜேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் பின், ராஜேஷின் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று சுடுகாட்டிற்கு கொண்டு சென்று உடலை எரித்தனர்.
இதற்கிடையில், சபீதா குடும்பத்தினர் திட்டக்குடி போலீசில் ராஜேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தனர்.
தண்ணீர் ஊற்றி அணைத்த போலீசார்
உடனடியாக போலீசார் சுடுகாட்டிற்கு சென்று, எரிந்து கொண்டிருந்த ராஜேஷின் உடல் மீது தண்ணீர் ஊற்றி அனைத்தனர். பின்னர், ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.