உண்மை காரணத்தை மகன் கூற மறுத்ததால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!
திருமணம் வேண்டாம் எனக்கூறிய மகன் உண்மை காரணத்தைக் கூறாமல் மறைத்ததால் பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்கமணி - ரத்னா தம்பதி. இவர்கள் விசைத்தறி தொழிலாளர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டது. மகன் ராஜா அண்ணாமலை. இவர் என்ஜினீயர். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவெடுத்தனர்.
இதனையடுத்து, அழகப்பம்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ராஜா அண்ணாமலைக்கு கடந்த மாதம் பேசி முடித்து நிச்சயித்துள்ளனர். ஆனால் அந்தப் பெண் வேறு ஒருவரை காதலித்துள்ளார். இதைத் தெரிந்து கொண்ட ராஜா அண்ணாமலை, வீட்டில் காரணத்தைக் கூறாமலே திருமணம் எனக்கு வேண்டாம் என கூறி இருக்கிறார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தங்கமணி – ரத்னா ஆகிய இருவரும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.