15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை - 2 பேர் கைது - பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் ஸ்ரீசாந்த் (15). ஸ்ரீசாந்த் சிறு வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்துவிட்டார்.
இதனையடுத்து அவரது தாயார் வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். ஸ்ரீசாந்த் அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா ராஜீவ் காந்தி வீட்டில் வசித்து வருகிறார். சிறுவன் ஸ்ரீசாந்த் அதே பகுதியில் உள்ள ஒரு டிராக்டரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தான்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலையில் பாக்கம் கிராமத்தில் கன்னி கோயில் வளாகத்தில் உள்ள எட்டி மரத்தில் கயிற்றால் தூக்கில்தொங்கியபடி சிறுவன் இறந்து கிடந்தான். காலையில் அப்பகுதியில் வழியில் சென்றவர்கள், சிறுவன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்ரீசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சிறுவன் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்கள் பரதராமி காவல் நிலையத்தில் ஸ்ரீசாந்த் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். போலீசார், ஸ்ரீசாந்த் இறந்து போன சம்பவம் தொடர்பாகவும் கடைசியாக ஸ்ரீசாந்தை அழைத்துச் சென்ற வாலிபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த வாலிபர்களை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் (25). அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சீவி (21) இறந்த சிறுவன் ஸ்ரீசாந்த் ஆகியோர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். நவீன் குமாரும், அவரது மனைவியும் அறையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஸ்ரீசாந்த் ஜன்னல் வழியாக அடிக்கடி எட்டிப் பார்த்துள்ளான். இதனை கண்ட நவீன்குமார், ஸ்ரீசாந்தை கண்டித்துள்ளார்.
சம்பத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு, நவீன்குமார் ஸ்ரீசாந்திடம் ஏன் ஜன்னலில் எட்டிப் பார்க்கிறார் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நவீன்குமார், சஞ்சீவி ஆகியோர் ஸ்ரீசாந்தை தாக்கியுள்ளனர். அப்போது அவர்களிடம் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வந்துள்ளான்.
ஸ்ரீகாந்த் தாக்கப்பட்டதால் அவமானம் அடைந்து மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனைதொடர்ந்து பரதராமி போலீசார் சிறுவன் ஸ்ரீசாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக நவீன் குமார் மற்றும் சஞ்சீவி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.